SSTA-வாரம் ஒரு உடல்நலத்தகவல் -கண்மணிகளுக்கு கண் பரிசோதனை அவசியம்

நீங்கள் பொறுப்பான பெற்றோரா? உங்கள் பிள்ளைகளை முழுமையான அக்கறையோடு கவனித்து வருகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் பிள்ளைகள் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

உங்கள் பாசத்திலும், பராமரிப்பிலும் எந்தக் குறையும் இல்லை என்றாலும் கூட உங்கள் ஆசை மகனோ (அ) அருமை மகளோ, கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம். காரணம், சிறு வயதிலும் கவனிக்கப்படாத பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு கணிசமாக இருப்பதோடு, இந்தியாவில் பல சிறுவர் - சிறுமியர் இதனால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒரு புள்ளிவிவர கணக்குப்படி தலைநகர் டெல்லியில் மட்டும் 2.5 லட்சம் சிறுவர் - சிறுமியர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். மற்றொரு புள்ளி விவரம் கொஞ்சம் திடுக்கிட வைக்கிறது. ஒவ்வொரு 5 சிறுவர்களிலும் ஒருவர் கண்டறியப்படாத பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் நூறில் இரண்டு பேர், வளர்ந்த பிறகும் கண்பார்வைக் கோளாறால் அவதிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


அதாவது சிறுவயதில், கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இவை வளர்ந்த பிறகும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


எனவேதான், கண்மணிகளின் கண்களை சரியான முறையில் பரிசோதனை செய்து பார்த்து, அவர்களின் பார்வை எவ்வித குறைபாடும் இல்லாமல் சீராக இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.


சிறு வயதிலேயே கண்டறியப்பட்டு விட்டாலும் பார்வைக் குறைபாடுகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து முழுவதும் குணப்படுத்தி விடலாம். சிறு வயதில் மூளையானது வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை கொண்டிருக்கிறது. வளர்ந்து விட்டால், பார்வைத் தன்மை கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விடுகிறது. அந்த நிலையில் சிகிச்சை அளிப்பதை விட, மூளை ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை கொண்ட சிறுவயதிலேயே சிகிச்சை அளிப்பது நல்ல பலனைத் தரும். பெரும்பாலான பார்வைக் குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம்.


பார்வைக் குறைபாடு பற்றி பிள்ளைகளுக்கு சொல்லத் தெரியாது என்பதால் பெற்றோர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள்புத்தகத்தை கண்ணுக்கு வெகு அருகாமையில் வைத்துப் படித்தாலோ, டி.வி.யை பக்கத்தில் சென்று பார்த்தாலோ, உஷாராகி விட வேண்டும். பார்வைக் குறைபாடு காரணமாகக் கூட பிள்ளைகள் இப்படிச் செய்யலாம். அதேபோல பள்ளியில், கரும்பலகை அருகே சென்று பார்க்கும் பழக்கம் இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


படக்கதை புத்தகங்களைக் காட்டும் போது அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், கவனிக்க வேண்டும். இப்படித் தான் சிறுவன் ஒருவன் படக்கதை புத்தகங்களிலும் ஆர்வமே இல்லாமல் இருந்திருக்கிறான். பின்னர்தான் தற்செயலாக அவனால் அந்தப் படங்களைப் பார்க்க முடியவில்லை என்ற விஷயம் தெரிய வந்தது. உடனடியாக பார்வைக் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிய வேண்டியிருந்தது.


மேலும், பிள்ளைகள் நல்ல புத்திசாலிகளாக இருந்தும் படிப்பில் கோட்டை விட்டாலோ, கவனக் குறைவால் பாதிக்கப்பட்டாலோ பார்வைக் குறைபாடு காரணமாக இருக்கலாம்.


அதனால், கண்பரிசோதனை அவசியம் என்கின்றனர். சொல்லப் போனால் மேலை நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.


நம் நாட்டில் அத்தகைய நிலை இல்லை. என்றாலும், குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அல்லது 3-4 வயதில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொண்டாலும் நல்லதுதான்.


குறிப்பாக குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு 5 வயதிற்குள் முழுமையான கண்பரிசோதனை செய்வது சிறந்தது. அதே போல குடும்பத்தில் பெற்றோர்களுக்கோ, தாத்தா பாட்டிகளுக்கோ காட்ராக்ட், குளுகோமா போன்ற குறைபாடு இருந்தால், தவறாமல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.


பரிசோதனை என்னும் போது பள்ளிகளில் செய்யப்படும் சாதாரண எழுத்து பரிசோதனை அல்ல. இவற்றின் மூலம் மாமூலான குறைபாடுகள் மட்டுமே தெரிய வரும். 40 சதவித பார்வைக் குறைபாடுகளை இத்தகைய சோதனைகளின் மூலம் அறிந்துக் கொள்ள முடியாது. ஆகவேதான், கண் மருத்துவரிடம் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். நுட்பமான பார்வைக் குறைபாடுகளை முழுமையான சோதனையில் மட்டுமே கண்டறிய முடியும்.


பார்க்கும் திறன். தசை சமநிலை, கண் சதை அமைப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்டவற்றை முழுமையான பரிசோதனை மூலம் அறிந்துக் கொள்ளலாம்.


ஒரு சில மருத்துவர்கள், உண்மையில் மழலையர் வகுப்பில் சேருவதற்கு முன்பாக, ஒவ்வொரு குழந்தைக்கும் இத்தகைய சோதனை செய்வது மிகவும் நல்லது என்று பரிந்துரை செய்கின்றனர்.


அப்படி இல்லாவிட்டாலும், பிள்ளைகளின் செயலைச் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று முதல் 5 வயதுக்குள் பார்வைக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து விட்டால், அவற்றை நிச்சயம் குணமாக்கி விட முடியும்.குழந்தைகள் அடிக்கடி தலைவலிப்பதாகச் சொன்னாலோ, படிப்பதற்காக கண்ணை ஒரு கையால் மூடுவது போல செய்தாலோ (அ) வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்து கொள்ள விரும்பினாலோ அவை பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.


`வரும் முன் காப்பதே சிறந்தது' என்பதால் குழந்தைகளின் கண் மீது ஒரு கண் வைத்திருக்க பெற்றோர்கள் மறக்கக் கூடாது.


அதே நேரத்தில் கண் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வேண்டும். கீரைகள், புரதச்சத்து மிக்க உணவு, கேரட், ஆகியவை கண்பார்வைக்கு மிகவும் நல்ல உணவுப் பொருட்களாகும்.


கண்களுக்கான உடற்பயிற்சியையும் கற்றுக் கொடுக்கலாம்.


குழந்தையைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு, புத்தகத்தைப் படித்துக் காண்பித்து அதில் உள்ள படம் (அ) எழுத்துக்களைச் சுட்டிக் காட்டி கவனிக்கச் செய்வது கூட நல்ல பயிற்சிதான்!

கண்ணுக்குக் கண்ணாக என்று சொன்னாலும் நடைமுறையில் நமது கண்களைப் பாதுகாப்பதில் நாம் போதிய அக்கறை கொள்வதில்லை. பார்வைக் குறைபாடு வந்த பிறகே கண்களைக் கவனிக்கிறோம். ஆனால் கண்களைப் பாதுகாக்க பல எளிமையான வழிகள் இருக்கின்றன. அவற்றில் சில மீன் உணவு கண்களுக்கு மிகவும் நல்லது. அதில் உள்ள ஓமேகா3 கொழுப்புத் தன்மை கொண்ட அமிலங்கள் வறண்ட கண் குறைபாட்டை போக்க வல்லது. மீன் சாப்பிடாதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடலாம்.

=நீச்சல் அடிக்கச் சென்றால் அதற்கான கண்ணாடி அணிந்து செல்லுங்கள். குளோரின் கண்களைப் பாதிக்காமல் தடுப்பதோடு மண் கரிசல்கள் பாதிப்பு ஏற்படுத்தாமலும் பாதுகாக்கும்.


=காரில் ஏசி இருந்தாலும், அதிலிருந்து முகத்திற்கு நேராக குளிர் காற்று வரச் செய்வதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக கால் பகுதியை நோக்கி காற்று வரட்டும். காரணம், குளிர் சாதன காற்று பஞ்சு போல. கண்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். வறண்ட கண்களிலும் பல வித பாதிப்பு உண்டாகலாம்.


=சிவப்பு வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துங்கள். அதில் உள்ள குயர்சிடின் (quercetin) காட்ராக்டை வராமல் தடுக்க வல்லது.


=எப்போது வெளியே சென்றாலும் குளிர் கண்ணாடி அணியலாம். இது பந்தாவிற்காக அல்ல. பாதுகாப்பிற்காக. குளிர் கண்ணாடி சூரிய வெப்பத்தில் இருந்து காப்பதோடு காற்றில் உள்ள வறண்ட தன்மையில் இருந்தும் காக்கிறது.


=வள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள். அதில் உள்ள வைட்டமின் `ஏ' இரவு நேர பார்வையை அதிகரிக்கச் செய்யும்.


=மேக் அப் செய்து கொள்ளும் பெண்கள் இரவு படுக்கச் செல்லும் முன் மேக் அப்பை கலைத்து விட்டு முகத்தைக் கழுவி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.


=டவல்கள் மற்றும் கைக்குட்டை மூலம் கிருமிகள் தாக்கலாம் என்பதால் இயன்றவரை முகம் துடைக்க புதிய (அ) துவைத்த டவலை மட்டுமே பயன்படுத்தவும்.


=கண்ணாடி அணிந்தால் மட்டும் போதாது. தொப்பியும் அணிவது சிறந்தது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்ணுக்குள் ஊடுருவாமல் தொப்பிகாக்கிறது.


=படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ அரை மணிக்கு ஒரு முறை அதனை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் தொலைவில் உள்ள பொருளை 30 விநாடி பார்க்க வேண்டும்.


=அடிக்கடி ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் பார்வையைப் பாதிக்கலாம்.


=மல்லிகை மலர் வாசனைத் திரவியம் (அ) வென்னிலா மனத்தை முகர்ந்து பாருங்கள். இவை மூளையில் பீட்டா கதிர்களை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் கவனிப்புத்திறன் கூடும். விழிப்புணர்வும் அதிகரிக்கும்.


=வாரத்தில் நான்கு முறையேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். குளுகோமா நோயாளிகள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் பாதிப்பு குறைவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.


=கீரைகள் அதிகம் சாப்பிடுங்கள்.அதே போல் உப்புத்தன்மை கொண்ட பண்டங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...