ஆன்-லைன் கலந்தாய்வில் 445 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரம்பின

தமிழகம் முழுவதும் 445 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நிரப்பப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
இதையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களும் நிரம்பியுள்ளன. அடுத்து வரும் 1,023 உடற்கல்வி ஆசிரியர் உள்பட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வும் ஆன்லைன் மூலம்
நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும், வட்டார வள மைய பயிற்றுநர்களின் மேற்பார்வையாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் சென்னையில் 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதில் பலர் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்ததாலும், தலைமையாசிரியர்கள் ஓய்வு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களாலும் மாநிலம் முழுவதும் 445 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, தகுதியான பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் வரவழைக்கப்பட்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் உள்ள திரைகளில் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டன.
பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை ஆன்-லைன் மூலம் தேர்வு செய்தனர்.
இந்தக் கலந்தாய்வுக்கு பதவி உயர்வுக்குத் தகுதியான சுமார் 600 பட்டதாரி ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 76 பேர் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். சுமார் 79 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
நிரம்பாத பணியிடங்களும் நிரம்பின: இந்த கலந்தாய்வுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும் நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் அங்குள்ள அம்பலவாயல், தெங்குமாரா உள்ளிட்ட சில பள்ளிகளிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் தலைமையாசிரியர் பணியிடங்கள் எந்தக் கலந்தாய்விலும் நிரம்பாது. அந்தப் பணியிடங்களும் இப்போது நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 42 தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 41 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 இடங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 இடங்களும் இந்த கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ளன.
ஆன்-லைன் கலந்தாய்வு தொடரும்: ஏற்கெனவே 1,080 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 184 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 143 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,023 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட சிறப்பாசிரியர்களுக்கும் மாநில அளவிலான ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...