பள்ளிப் படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக கல்லூரிப் படிப்புக்கு கடன் தர வங்கிகள் மறுக்க முடியாது

பள்ளிப் படிப்பின்போது மாணவர் ஒருவர் குறைவான மதிப்பெண்களைப் பெற்றார் என்பதைக் காரணம் காட்டி அவர் கல்லூரியில் உயர் கல்வி பயிலும்போது கல்விக் கடன் வழங்க வங்கிகள் மறுக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் பயிலும் வேலூர் மாவட்டம்,
ஆம்பூரைச் சேர்ந்த பி. அனிதா என்ற மாணவி மனு தாக்கல் செய்திருந்தார்.
நான் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவள். எனது பெற்றோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். மேலும் அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். எங்கள் குடும்பத்தில் முதன்முறையாக எனக்குத்தான் கல்லூரிப் படிப்பு வரை பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நான் கடந்த 2005-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்தேன். எனினும் அப்போது நோய் வாய்ப்பட்டிருந்த எனது தாயாரைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததாலும், குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவும் அப்போது என்னால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு எனது தாயார் இறந்து விட்டார். அதன் பிறகு படிப்பைத் தொடர விரும்பிய நான், இப்போது கோலாரில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் படிப்பு படித்து வருகிறேன். இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்தை கடனாக வழங்குமாறு கோரி ஆம்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு கடன் வழங்க வங்கி மறுத்து விட்டது என்று அந்த மனுவில் அனிதா கூறியிருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி டி. ஹரி பரந்தாமன் விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளி வகுப்புகளில் மிகக் குறைந்த மதிப்பெண்களை மட்டுமே அனிதா பெற்றுள்ளதால், அவருக்கு கடன் வழங்க இயலாது என்று வங்கித் தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் அனிதாவுக்கு நான்கு வாரங்களுக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உத்தரவு விவரம்: மனுதாரர் தாழ்த்தப்பட்ட, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு இவரைத் தவிர இதுவரை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. இதையெல்லாம் பரிசீலித்து, அவருக்கு வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்கியிருக்க வேண்டும்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூட தனது மெட்ரிகுலேஷன் படிப்பில் மொத்தம் 750 மதிப்பெண்களுக்கு வெறும் 287 மதிப்பெண்கள்தான் பெற்றார். அப்போதைய பரோடா அரசர் அவருக்கு ஆதரவளித்து, அவரது கல்விக்கு தேவையான நிதியுதவிகளை செய்ததாலேயே அம்பேத்கரால் உயர் கல்வி பயில முடிந்தது.
ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள், பள்ளிக் காலத்தில் மனுதாரர் குறைந்த மதிப்பெண்களையேப் பெற்றுள்ளார் என்று கூறி அவரது கல்லூரி படிப்புக்கு கல்விக் கடன் வழங்க மறுத்துள்ளனர். ஆனால், உயர் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கல்விக் கடன் வழங்கும் முன் அவர் பள்ளிப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும் என்று எந்த விதிகளிலும் கூறப்படவில்லை.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை மூன்றாவது நபரின் உத்தரவாதத்தைக் கூட கேட்காமல் வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசு கூறியுள்ளது.
ஆகவே, மனுதாரருக்கான கல்விக் கடனை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...