வழிகாட்டுதல் இல்லாததால், வீணாகும் மாணவர்களின் திறமை

:போதிய வழிகாட்டுதல் இல்லாததால், உலக அளவில் அறிவியல் அறிவை வெளிப்படுத்த வேண்டிய மாணவ, மாணவியரின் திறமை, வீணாகி வருகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் திறனை
அதிகரிக்கச் செய்து, ஆராய்ச்சி மனநிலையை ஊக்கப்படுத்தும் வகையில், இம்மாநாடு நடத்தப்படுகிறது. மனப்பாடம் செய்யும் பாடப்புத்தக அறிவை தவிர்த்து, சமூகம் சார்ந்த விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.இம்மாநாட்டில் சமர்ப்பிக்க, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் கட்டுரை தயார் செய்யலாம். ஆய்வு கட்டுரைக்கு 100 மதிப்பெண், ஆய்வை விளக்கும் முறைக்கு 100 மதிப்பெண் வழங்கப்படுகிறது. நான்கு மாணவர்களுடன், ஒரு வழிகாட்டி ஆசிரியர் உதவ வேண்டும். சிறந்த ஆய்வு செய்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது.திருப்பூரில் கடந்த ஜூலை 23ம் தேதி, ஆய்வு கட்டுரை தயாரிப்பது குறித்து, வழிகாட்டி ஆசிரியர்கள் 118 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து 88 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பதாக, பள்ளிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 22 பள்ளிகளை சேர்ந்த 48 கட்டுரைகள் மட்டுமே மாவட்ட மாநாட்டில் இடம் பெற்றன. ஒன்பது அரசு பள்ளிகள் 11 கட்டுரைகளையும், 12 மெட்ரிக் பள்ளிகள் 34 கட்டுரைகளையும், ஒரு சி.பி.எஸ்.சி., பள்ளி 3 கட்டுரைகளையும் சமர்ப்பித்தன.குறைந்தது ஏன்?மாணவர்களிடம் விஞ்ஞான அறிவை வளர்க்கவும், வசிக்கும் பகுதியில் உள்ள சமூக பிரச்னை குறித்தும், அதற்கான காரணம், தீர்வு குறித்தும் அறியும் வகையில் நடந்திருக்க வேண்டிய ஆய்வுகள், 88ல் இருந்து 48 ஆக குறைந்துள்ளது.

இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் போதிய ஆர்வமும், மாணவ - மாணவியர் பெற்றோர் தரப்பில் ஒத்துழைப்பும் இல்லை என்பதே காரணமாக உள்ளது.
ஆய்வுக்காக, வழிகாட்டி ஆசிரியர்கள், தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண் டும்; மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, ஆய்வில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல தூண்டுகோலாய் இருக்க வேண்டும். தொடரும் வேலைப்பளு, தேர்வுக்கான "சிலபஸ்' முடிக்க வேண்டிய நிலையில், அக்கறை காட்டினாலும், ஆர்வமாக செயல்பட முடியவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள். குழந்தைகளின் விஞ்ஞான அறிவை விரிவடையச் செய்யும் அளவுக்கு படிப்பறிவோ, வசதியோ இல்லாமல் பெற்றோர் இருப்பதால், அவர்களிடம் ஒத்துழைப்பு இருப்பதில்லை.என்ன செய்யலாம்?ஆய்வு கட்டுரை தயாரிக்க, அதிக செலவு ஏற்படப்போவதில்லை; நேரம் ஒதுக்கி செயல்படுவதும், ஒருங்கிணைத்து செல்வதும் முக்கியம். சமூகம் குறித்த மதிப்பீட்டை, படிக்கும் காலத்திலேயே மாணவ, மாணவியர் பெறுவது, எதிர்கால நாட்டுக்கு அவர்களை உருவாக்க உதவுகிறது.வரும் ஆண்டுகளில், கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், கல்வி ஆலோசகர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும். உலக அளவிலான நாடுகள் பங்குபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், தமிழகம் முன்னிலை பெறும் வகை யில், அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆய்வு கட்டுரை சமர்ப் பிக்க விரும்பும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில், அக்குழு செயல்பட வேண்டும்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில்,""தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது; அவர்களை ஒருங்கிணைத்தும், வழிநடத்திச் செல்வதுமே மிக முக்கியம். அவர்களது அறிவை தூண்டிவிட்டு, விஞ்ஞான ஆற்றலை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...