ரிவர்சில் வந்த லாரி மீது மோதியது பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பரிதாப பலி


பெருங்குடி அருகே லாரி மீது மாநகர பஸ் மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் இறந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். சென்னை அடுத்த திருப்போரூரில் இருந்து நேற்று காலை 7.30 மணியளவில் மாநகர பஸ் (தடம் எண் 519,சி) தி.நகருக்கு புறப்பட்டது. டிரைவர் அசோக்குமார் பஸ்சை
ஓட்டினார். உதயகுமார் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

கந்தன்சாவடி பஸ் நிறுத்தத்தில் காலை 8.30 மணிக்கு பஸ் நின்றது. பயணிகள் ஏறி, இறங்கியதும் மீண்டும் புறப்பட்டது. அப்போது சிமென்ட் லோடு ஏற்றிய ஆந்திர மாநில லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும் விஜயேந்திரர் காலனிக்கு செல்வதற்காக இடதுபுறம் லாரியை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார். அது சிறிய வளைவு என்பதால் திருப்ப முடியவில்லை. அதனால் லாரியை டிரைவர் ரிவர்ஸ் எடுத்தார்.

இதை பார்த்த மாநகர பஸ் டிரைவர், வண்டியை வலது பக்கம் திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது பஸ் பயங்கரமாக இடித்தது. இதில் பின்பக்க படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த 7 மாணவர்கள், நிலைதடுமாறி விழுந்தனர். அவர்களுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் அலறி கூச்சலிட்டதால் பஸ்சை டிரைவர் உடனடியாக நிறுத்தினார். விபத்து பற்றி போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் தரப்பட்டது.

கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 7 மாணவர்களையும் மீட்டு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பெருங்குடி வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சேகர் (18), செம்பொன் நகர் 7,வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் மனோஜ்குமார் (18), செம்மஞ்சேரி 91,வது குறுக்கு தெருவை சேர்ந்த லட்சுமி மகன் பாலமுருகன் (16), துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த உதயசங்கர் மகன் விஜயன் (16) என விசாரணையில் தெரியவந்தது.

இவர்களில் சேகர் நந்தனம் கல்லூரியில் பி.காம் முதலாண்டும், மனோஜ்குமார், தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டும், பாலமுருகன், தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பும், விஜயன், சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வும் படித்து வந்தனர். செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ் (14), துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பார்த்திபன் (15), மணிகண்டன் (15) ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

இதனால் ராஜிவ் காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டுள்ளனர். தொ டர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த தும் லாரி டிரைவரும் பஸ் டிரைவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.

போட்டி போட்டு வேகமாக ஓட்டுவதே விபத்துக்கு காரணம்

பொதுமக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. காலை, மாலை நேரத்தில் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. பள்ளிக்கும் வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் நெரிசலில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. டிரைவர்களும் சரியாக பஸ்சை ஓட்டுவதில்லை. போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் ஓட்டுகின்றனர்.

நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்துவதில்லை. சிறிது தூரம் தள்ளிச்சென்றே நிறுத்துகின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள் ஓடிச் சென்று ஏற வேண்டி உள்ளது. பாஸ் உள்ள மாணவர்கள் ஏறுவதை தவிர்க்கவே சில டிரைவர்கள் பஸ்சை தூரத்தில் சென்று நிறுத்துகிறார்கள். எனவே ராஜிவ் காந்தி சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மாணவர்கள் சாலை மறியல்

விபத்தில் இறந்த மனோஜ்குமார், தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவர் இறந்த தகவல் அறிந்ததும் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் ராஜிவ் காந்தி சாலையில் திரண்டனர். தனியார் மருத்துவமனை எதிரே பெருங்குடி சிக்னலில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம், ‘‘இறந்த மாணவன் குடும்பத்துக்கு ^10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவர்களுக்காக காலை, மாலை வேளையில் அதிக பஸ்களை இயக்க வேண்டும். ரேஸில் செல்வது போன்று டிரைவர்கள் பஸ்சை இயக்குகிறார்கள். விபத்தில் சம்பந்தப்பட்ட டிரைவர்களை கைது செய்ய வேண்டும்’’ என மாணவர்கள் கூறினர். ‘உங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்’ என துணை கமிஷனர் உறுதி அளித்தார்.

அப்பாவும், அண்ணனும் இல்லை தங்கை கண்ணீர்

பஸ் விபத்தில் உயிரிழந்த விஜயகுமாரின் தந்தை உதயகுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதே போல பாலமுருகனின் தந்தையும் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு குடும்பத்திலும் தந்தையை போலவே, மகன்களும் விபத்தில் சிக்கி இறந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலமுருகனின் தங்கை கலைச்செல்வி கூறுகையில், ‘‘நான் 7ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா இறந்து விட்டார். அம்மா மகாலட்சுமி வீட்டு வேலை செய்துதான் என்னையும், அண்ணனையும் படிக்க வைத்தார். படித்து முடித்துவிட்டு பெரிய வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று அண்ணன் அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பான். ஆனால், இப்போது விபத்தில் இறந்துவிட்டான். அப்பாவும் இல்லை. அண்ணனும் இல்லை. எங்களுக்கு ஆதரவு அளிக்க யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

பஸ்சில் வந்த மாணவி பேட்டி
தானியங்கி கதவை மூடியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது பாலிடெக்னிக் மாணவி சந்தியா (16) : டிரைவர் அலட்சியமே விபத்துக்கு காரணம். ஏசி பஸ்சில் பாஸ் செல்லாது. பஸ் எண்ணிக்கை குறைவாக வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரு சில டிரைவர்கள் மற்ற வாகனங்கள் மீது உரசுவதுபோலவே பஸ்சை வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். இப்படி ஓட்டுவதால்தான் இதுபோன்ற விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த பஸ்சில் தானியங்கி கதவு இருக்கிறது. அது இயங்காததால் மூடப்படவில்லை. கதவை மூடியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

விபத்து குறித்து பஸ்சில் பயணம் செய்த 10ம் வகுப்பு மாணவன் சிவா கூறியதாவது: படிக்கட்டில் தொங்கியபடி 3 பேர்தான் வந்தனர். டிரைவர் அதிவேகத்தில் ஓட்டிவந்தார். லாரி ரிவர்சில்வந்தபோது, சிறிய இடைவெளியில் புகுந்து போய்விடலாம் என டிரைவர் பஸ்சை ஓட்டியதால்தான் விபத்து நடந்துள்ளது. மோதிய அதிர்ச்சியில்தான் படிக்கட்டில் தொங்கிய 3 பேருடன் உள்ளேயிருந்த 4 பேரும் விழுந்து படுகாயம் அடைந்தார்கள். ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் உதவியோடு அவர்களை மீட்டனர். பஸ் டிரைவர்தான் இந்த விபத்துக்கு காரணம்

கார்த்திக் (22): திருப்போரூரில் இருந்து இந்த பஸ் வந்தது. கேளம்பாக்கத்தில் நான் ஏறினேன். அதன்பிறகு துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடியில் அதிகளவு மாணவர்கள் ஏறினர். இடமில்லாததால்தான் படிக்கட்டில் நிற்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டத்திலும் டிரைவர் படுவேகமாக வண்டியை ஓட்டினார். கந்தன்சாவடி நிறுத்தத்தில் இருந்து 50 அடி கூட பஸ் செல்லவில்லை. அதற்குள் விபத்து ஏற்பட்டுவிட்டது. பெண்கள் அலறியபடி கீழே இறங்கி ஓடினார்கள். ராஜிவ் காந்தி சாலையில் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என போக்குவரத்து போலீசார் கணக்கெடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...