ஆசிரியர் தகுதித் தேர்வு: தகுதி மதிப்பெண்களில் சலுகை கோரி வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் எம்.பழனிமுத்து பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி
ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்  1.4.2011 அன்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், தகுதித் தேர்வு எழுதும் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் 10 சதவீதமும், ராஜஸ்தானில் 5 சதவீதமும் தகுதி மதிப்பெண்களில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் சில மாநிலங்களிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை.
இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12.7.2012 மற்றும் 14.10.2012 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 22 ஆயிரம் ஆசிரியர் பணி காலியிடங்களில் 4 ஆயிரத்து 180 இடங்கள் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் லட்சக்கணக்கானோர் தகுதித் தேர்வு எழுதியும்கூட, இந்த காலிப் பணியிடங்களை நிரப்பிட போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.
இந்நிலையில், மத்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் கூறியபடி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை அளித்திருந்தால் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதி பெற்றிருப்பார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்காமல் நடைபெறும் இந்த ஆசிரியர் பணி நியமனம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனமானது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...