கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கல்வித்துறையின் சலுகைகள்!

அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் டிஸ்லெக்சியா(DYSLEXIA)எனப்படும் கற்றலில் குறைபாடுள்ள மாணவர் - மாணவியர் தேர்வெழுத, பள்ளிக் கல்வித்துறையால் பல்வேறு சலுகைகள்
வழங்கப்படுகின்றன. ஆனால் அவை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருப்பதில்லை. இதனால், சலுகைகள் இருந்தும் பயன்படுத்துவோர் இல்லாத நிலை தொடர்கிறது.
அரசாணை தரும் சலுகை:
கற்றலில் குறைபாடுள்ள மாணவர் - மாணவியருக்கு அரசுத் தேர்வுத்துறை நடத்தும் பொதுத்தேர்வுகளில் பள்ளிக் கல்வித்துறையால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கடந்த 10.2.2010-ல் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் விரிவான அரசாணையே வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படும் மேல்நிலைத் தேர்வு, எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் மற்றும் ஈ.எஸ்.எல்.சி. ஆகிய  பொதுத்தேர்வுகளில் உடல் ஊனமுற்ற, கண் பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத, எதிர்பாராத விதமாக கைமுறிவு ஏற்பட்ட, மனவளர்ச்சி குன்றிய மற்றும் டிஸ்லெக்சியா குறைபாடுள்ள மாணவர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் சலுகைகள் குறித்து அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சலுகைகள் என்னென்ன?
டிஸ்லெக்சியா குறைபாடுள்ள மாணவர்களுக்கு செயல்முறை எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் நேரம் அளிக்கவும், கால்குலேட்டரை பயன்படுத்தவும், வினாத்தாளை படித்துக்காட்ட அல்லது சொல்வதை எழுத ஓர் ஆசிரியரை நியமிக்கவும் அரசாணையில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது தனிப்பட்ட முறையில் ஓர் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்றோ தேர்வெழுத விரும்பும் ஒருவரை தனித்தேர்வராக பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
தேர்வுகளில் "கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு' கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுவதில் இருந்து விலக்கு கோரலாம். யாரேனும் மொழிப்பாடம் இரண்டையும் சேர்த்து தேர்வு எழுத விரும்பினால் அவர்களை அவ்வாறே தேர்வு எழுதவும் அனுமதிக்கலாம். இத்தகைய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பொழுது எழுத்துப் பிழைக்கென மதிப்பெண்களைக் குறைக்காமல் பாடப்பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளிக்கலாம் என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சலுகைகளைப் பெறுவது எப்படி?
டிஸ்லெக்சியா குறைபாடு உள்ள மாணவர்கள் அரசின் சலுகைகளைப் பெற உரிய மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு வழங்கும் சான்றிதழ், பாட ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின் பரிந்துரைச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை அறிவுறுத்துகிறது. உரிய மருத்துவரின் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உரிய காலவரையறைக்குள் விண்ணப்பிப்பதன் அடிப்படையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநரே கூர்ந்தாய்வு செய்து இந்தச் சலுகைகளை அளிக்கவும் அரசாணை வகை செய்கிறது.

பயன் பெறுவோர் சிலரே: ஆனால், இந்த சலுகைகளை பெற்று பயனடைவோர் மாநில அளவில் வெகு சிலரே என்று கல்வித்துறை வட்டாரங்களே தெரிவிக்கின்றன.
டிஸ்லெக்சியா குறைபாடுள்ள மாணவர்களைக் கண்டறியவும், உரிய மருத்துவச் சான்றிதழ்களுடன் தேர்வுக்கு சலுகைகள் கேட்டு விண்ணப்பிக்கவும் தேவையான விழிப்புணர்வு, கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு இன்னமும் ஏற்படவில்லை.
இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களால் பதில் தெரிவிக்க முடியவில்லை. காரணம் விழிப்புணர்வுக்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய சான்றுகளுடன் பரிந்துரை செய்தால்கூட தேவையான சலுகை வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கண்பார்வையற்ற, காது கேளாத, வாய் பேச இயலாத, உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றிய மாணவர், மாணவியரை கண்டறிந்து அவர்களுக்கு பொதுத்தேர்வுகளில் சலுகை கிடைக்க செய்வதில் சிரமங்கள் இல்லை. காரணம் இந்த குறைபாடுகள் வெளிப்படையாக தெரியக்கூடியவை. ஆனால், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்களின் தொடர் கண்காணிப்பின் மூலமே இது சாத்தியம்.
எனவே கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறியவும், அவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகளில் சலுகைகள் கிடைக்கவும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.
கண்டறிவது எப்படி?
சாதாரண மாணவர்களைப்போல் இல்லாமல் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் பாடங்களை அவ்வளவாக புரிந்து கொள்ளமாட்டார்கள். மற்றவர்களைவிட மிகவும் மந்தமாகவே படிப்பார்கள். மிகவும் சிரமப்பட்டு மனப்பாடம் செய்வர். ஆனால், தேர்வு எழுதும்போது படித்தவற்றை மறந்துவிடுவர். அவர்களது விடைத்தாள்கள் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இருக்கும். இவையெல்லாம் கற்றலில் குறைபாடுள்ளவர்களுக்கான அறிகுறிகள்.

இத்தகைய குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய பயிற்சிகள் அளித்தால் குறைபாடுகள் நீங்கி, இவர்களும் மற்ற மாணவர்களைப்போல் கல்வி கற்பார்கள் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகளின் படிக்கும் திறன் குறித்து ஆரம்ப நிலையிலேயே விழிப்புடன் கண்காணிப்பதன் மூலம் கற்றலில் குறைபாட்டை பெற்றோர்கள் கண்டறிய முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...