10ம் வகுப்பு வரையான பாட புத்தகங்கள் தட்டுப்பாடு : டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்


பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப்
புத்தகங்கள் கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான பாடப் புத்தகங்களை, அச்சிட்டு வழங்குகிறது. இதில், எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை.
அரசு பள்ளி மாணவர், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் மற்றும் தனியார் பள்ளி மாணவர் என, அனைத்து தரப்பு மாணவ, மாணவியருக்கும், 8 கோடி பாடப் புத்தகங்களை, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது.
சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், எப்போது சென்றாலும், பாடப் புத்தகங்கள், விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், சமீப காலமாக, ஆசிரியர் போட்டித் தேர்வுகள், அதிகளவில் நடந்து வருவதால், பாடப் புத்தகங்களுக்கு, அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு, "கோச்சிங் சென்டர்'களையே, தேர்வர், நம்பி இருக்கின்றனர். கோச்சிங் சென்டர்களும், புற்றீசல் போல், மாநிலம் முழுவதும், பரவி இருக்கின்றன. எனினும், அனைத்து கோச்சிங் சென்டர்களும், தரமானவையாக இருப்பதில்லை.
கடந்த ஆண்டு ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்பட்ட போது, கோச்சிங் சென்டர்களை, தேர்வர்கள் முண்டி அடித்தனர். அந்த தேர்வை, 6 லட்சம் பேர் எழுதியபோதும், வெறும், 2,448 பேர் மட்டுமே, தேர்வு பெற்றனர்.
இதனால், கோச்சிங் சென்டர்கள் மீதான நம்பிக்கையை, தேர்வர்கள் இழந்துள்ளனர். புதுவிதமான முறையில், கேள்விகள் கேட்டதையும், முக்கியமாக, பாடப் புத்தகங்களில் உள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, கேள்விகள் கேட்டதையும், கோச்சிங் சென்டர்கள் எதிர்பார்க்கவில்லை.
முதல் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், பாடப் புத்தகங்களை படித்ததால் தான், வெற்றி பெற முடிந்தது என்ற கருத்தை தெரிவித்தனர். தேர்வர்களும், பாடப் புத்தகங்களின் மகத்துவத்தை உணர்ந்தனர்.
இதனால், கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வின் போது, பாடப் புத்தகங்கள் விற்பனை, சக்கை போடு போட்டது. இரண்டாவது தேர்வில், 18 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், ஏப்ரலுக்குள், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வின் மூலம், 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளதால், தேர்வை எழுதுவதற்கு, 6 லட்சம் பட்டதாரிகள், தயாராக உள்ளனர். இவர்கள், கோச்சிங் சென்டர்களை நம்பாமல், பாடப் புத்தகங்களை புரட்டுவதில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாடப் புத்தகங்கள் வாங்குவதற்காக, தினமும், பாடநூல் கழக அலுவலகத்திற்கு, ஏராளமானோர் வருகின்றனர். ஆனால், பாடப் புத்தகங்கள், இருப்பு இல்லாததைக் கண்டு, ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இது குறித்து, பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியதாவது:
மாணவ, மாணவியரை கருத்தில் கொண்டு தான், பாடப் புத்தகங்களை அச்சிடுகிறோம். பெரிய அளவிற்கு, புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன், புத்தகங்களை அச்சிடுவதில்லை.
ஆனால், ஆசிரியர் போட்டித் தேர்வுகள் காரணமாக, பாடப் புத்தகங்கள் தேவை அதிகரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்க உள்ளது. புத்தகங்களில் உள்ள, சிறு சிறு பிழைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவியருக்கு, பிழையின்றி, தரமான பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, ஏற்கனவே அச்சிடப்பட்ட, பழைய புத்தகங்கள், சிறிதளவே இருப்பு இருந்தன. அவற்றை, ஏற்கனவே விற்பனை செய்து விட்டோம்.
ஆனாலும், விற்பனை பிரதிகள் தேவை அதிகரித்துள்ளன. திடீரென, அதிகளவு புத்தகங்கள் தேவை எனில், நாங்கள் என்ன செய்ய முடியும்? விற்பனைக்கு என, தனியாக அச்சடித்து, இப்போது வழங்க முடியாது. புதிய புத்தகங்கள் வரும் வரை, காத்திருக்கத் தான் வேண்டும்.
இவ்வாறு, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்தகங்கள் தட்டுப்பட்டால், பழைய புத்தகங்களைத் தேடி, தேர்வர்கள் அலைகின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள சில கடைகளில், பாடப் புத்தகங்களை நகல் எடுத்து வைத்து, அதிக விலைக்கு, விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், திருவல்லிக்கேணி கடைகளிலும், தேர்வர்கள், ஏறி, இறங்கி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...