மாணவர் போராட்ட எதிரொலி: கலை, அறிவியல், சட்ட கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

ஈழ தமிழர்களுக்காக, மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற விடுமுறையை, தமிழக அரசு
அறிவித்துள்ளது.
தேர்வுகள்: திங்கள்கிழமை அன்று, கல்லூரி மாணவர்கள், நாடு தழுவிய பேராட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து, கல்லூரிகளில் நடந்து வரும் மாதிரி தேர்வுகளும், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. ஈழ தமிழர்களுக்காக, தமிழகம் முழுவதும், மாணவர்களின் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சென்னையில் நடந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தில், பலரது உடல் நிலை மோசமடைந்தது. அவசர சிகிச்கைக்காக, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சென்னையில், லயோலா கல்லூரி மாணவர்கள், எட்டு பேர் துவக்கி வைத்த, ஈழ தமிழர்களுக்கான போராட்டம், தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
சென்னை, நந்தனம், மாநிலக் கல்லூரி, புது கல்லூரி, சட்டம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை, பாதிக்கப்பட்டு உள்ளன. வங்கி, தபால் நிலையம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களை மாணவர்கள் முற்றுகையிட்டு போராடுவதால், அந்த அலுவலகங்களின் பணிகள், முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை கொளுத்தி வருவதால், பெரும் பதற்றமும் நிலவுகிறது. ஆயிரக் கணக்கான மாணவர்கள், உண்ணாவிரதம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் தொடரும் நிலையில், உடல்நிலை மோசமடைந்த, பல பகுதியில் உள்ள, நூற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வருவதால், கல்லூரிகள் இயங்காமல், வெறிச்சோடி காணப்படுகின்றன.
விடுதிகள் மூடல்: இந்நிலையில், மாணவர்களின் மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றத்தை தணிக்க, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், காலவரையற்ற விடுமுறையை, அரசு, நேற்று மாலை அறிவித்தது. இதற்கிடையே, கல்லூரி விடுதிகளும் மூடப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் உள்ளனர். கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளும், மறுதேர்வு அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து சட்ட கல்லூரிகளுக்கும், காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் தொடரும்: கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வதாக, தமிழீழ விடுதலைக்காக மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து போராட்ட குழுவினர் கூறியதாவது: வரும், 18ம் தேதி, 31 மாவட்டங்களில் உள்ள, மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளோம். இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள, ஒரு கோடி மாணவர்களை ஒருங்கிணைந்து, மாபெரும் தொடர் முழக்க போராட்டத்தை நடத்த உள்ளோம். மாநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என அனைத்து இடங்களிலும், மாணவர்களின் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும். அனைத்து மாவட்ட போராட்ட குழுக்களுக்கும், தனி திட்டங்களை தயாரித்து, அந்தந்த மாவட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுவர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...