தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களில் கண்காணிப்பு தீவிரம்

 நாமக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி மாணவர்கள் எழுதும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வின் போது நாமக்கல் பொம்மகுட்டைமேட்டிலுள்ள தனியார் பள்ளியான காமராஜர்
மேல்நிலைப் பள்ளியில், முறைகேடாக மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை அட்டையில் எழுதிக் காட்டியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அந்தப் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் செல்லப்பம்பட்டி அரசுப் பள்ளி தேர்வு மையத்துக்கு மாற்றப்பட்டனர். இதன்படி, காமராஜர் பள்ளி மையத்தில் தேர்வு எழுதி வந்த 405 மாணவர்களும் வியாழக்கிழமை செல்லப்பம்பட்டி அரசுப் பள்ளியில் தேர்வு எழுதினர்.
இதற்காக அந்த மையத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த 16 அறைகளுடன் கூடுதலாக 29 அறைகள் தேர்வுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அதற்கேற்ப அறைக் கண்காணிப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள், பறக்கும்படை அலுவலர்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் வை. குமார் நேரடி கண்காணிப்பில் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தைச் சுற்றி கண்காணிப்பு அலுவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, இந்த மாவட்டத்தில் 2 இயக்குநர்கள், 2 இணை இயக்குநர்கள் தலைமையில் சிறப்புத் தனிப்படைகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
தேர்வில் காப்பியடித்தது தொடர்பாக, இதுவரை 12 மாணவர்கள் பிடிபட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த மாவட்டத்திலுள்ள 270 பறக்கும் படை அலுவலர்களுடன், தற்போது அருகிலுள்ள பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 130 பறக்கும் படை அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் எஸ். அன்பழகன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.ராமேஸ்வர முருகன், மெட்ரிக். பள்ளிகளின் இணை இயக்குநர் எஸ்.கார்மேகம், தொழில்கல்வி பிரிவு இணை இயக்குநர் முத்து பழனிச்சாமி ஆகியோருடன் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக உறுப்பினர் பிச்சை தலைமையிலான கூடுதல் சிறப்புத் தனிப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...