கனவு ஆசிரியர் - கற்றலை இனிமையாக்கும் ஆனந்தி டீச்சர்!

தமிழகத்தில் சி.சி.இ. மதிப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர் களிடையே கற்றல் இனிமையாகி இருக்கிறது. இனிமையான சூழலுடன் மாணவர்கள் பாடங்களைச் சுமையின்றிக்
கற்கிறார்கள்.

ஆனால், கும்பகோணம் அருகே முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஓன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்,  ஆனந்தி டீச்சர் ஆசிரியையாக வந்ததிலிருந்தே கடந்த பல ஆண்டுகளாக  கற்பதை இனிமையாகக் கொண்டாடிவருகின்றனர்.

ஆனந்தி டீச்சர் 1999-ல் ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றபோது, மாணவர்களுக்கு ஃப்ளாஷ் கார்டுகளைப் பயன்படுத்திப் பாடம் நடத்துவதன் அவசியம் சொல்லித்தரப்பட்டது. அப்போது கார்டுகளை உருவாக்கத் தொடங்கி, இன்று வரை சுமார் 30,000 ஃப்ளாஷ் கார்டுகள் வைத்துள்ளார்.

ஆனந்தி டீச்சரைச் சந்திக்கச் சென்றபோது, 'தன்னானன்னே தன்னானே... தன்னானன்னே தன்னானே...'' என மெட்டு அமைத்து, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் பெயர்களையும் பாடலாகப் பாடி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

'ஒன்று... யாவர்க்கும் தலை ஒன்று. இரண்டு... முகத்தில் கண்கள் இரண்டு. இப்படித்தான் நான் ஒன்று, இரண்டு கற்றேன். அதே வழிமுறையில்தான் 32 மாவட்டங்கள், இந்திய மாநிலங்கள், தலைநகர் என அனைத்தையும் பாடல்களாகச் சொல்லித் தருகிறேன்'' என்கிறார்.


அறிவியலில் கோள்கள், பிளாஸ்டிக்கின் தீமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு... என 150 தலைப்புகளில் மாணவர்களுக்குப் பாடல்கள் எழுதிவைத்திருக்கிறார் ஆனந்தி டீச்சர். ''இதற்கு பாடல் திறமை அவசியம் இல்லை. மாணவர்களுக்குப் புரியும்படி இருந்தாலே போதும். இப்படிப் பாடம் நடத்தும்போது அவர்கள் மனதில் நன்றாகப் பதியும்'' என்றவரிடம் ஃப்ளாஷ் கார்டு பயன்படுத்துவது பற்றி கேட்டோம்.


''ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஃப்ளாஷ் கார்டு மூலம் சொல்லித்தரும் பழக்கம் இருந்தது. இப்போது சமச்சீர்க் கல்வி முறையால், என்னுடைய ஃப்ளாஷ் கார்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆசிரியர் விருப்பத்தோடு வகுப்பில் பாடம் நடத்தும்போதுதான், அது மாணவர்களிடம் கற்றலில் விருப்பத்தை உண்டாக்கும். நான் படிக்கும்போது தங்கம் என்றொரு டீச்சர் இருந்தார். அவர்தான் என்னுடைய கனவு ஆசிரியர். 'நான் ஆசிரியரானால் இவர் போலத்தான் இருக்கணும்’ என நினைத்தேன். அந்தக் கனவு பலித்திருப்பதாக நினைக்கிறேன்'' என்கிறார் பூரிப்புடன்.

ஆனந்தி டீச்சர்

ஆனந்தி டீச்சரின் வித்தியாசமான கற்பித்தல் முறையைக் கண்டு, குஜராத்தில் உள்ள ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனமும், ரத்தன் டாடா அறக்கட்டளையும் இணைந்து, 2005-ம் ஆண்டு 'இன்னோவேட்டிவ் டீச்சர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்து இருக்கின்றன.

''மாணவர்களுக்கு நிறைய புதுப் புதுத் தகவல்களைக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் வேலை. அதனால், தினம் தினம் ஆசிரியரும் புதிய அறிவைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் அறிவை வளர்க்க முடியும்' என்கிறார் ஆனந்தி டீச்சர்.

- மா.நந்தினி

படங்கள்: ர.அருண் பாண்டியன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...