அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி : கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமா?

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்ட
பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற விதத்தில், இடை நிற்றலை குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்; நான்கு ஜோடி இலவச சீருடைகள், இலவச நோட்டுப்புத்தகங்கள், சிறப்பு கல்வி உபகரணங்கள், புத்தகப்பை, ஜியோமெட்ரி பாக்ஸ் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், புத்தகங்களை சுமந்து சென்று படிப்பதற்கு பதிலாகவும்; தேர்வு பயத்தினால், பள்ளியில் இடை நிற்றல் அதிகரிப்பதை தவிர்க்கும் வகையிலும், பருவ முறையில் கல்வி கற்பிக்கும் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறை அமல்படுத்தி உள்ளது.தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி முறை மாற்றம், விலையில்லா பொருட்கள் வழங்கினாலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை நாடி வருவதை கண்கூடாக பார்க்கலாம். ஆங்கில மொழிக்கல்வி என்பது இன்றியமையாததாக மாறியுள்ளது.

இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கில வழியில் கல்வி பயிலும் வகையில், ஆங்கில வழிக்கல்வியினை கொண்டு வர அரசு திட்டமிட்டு, தற்போது அதை செயல்படுத்தி உள்ளது. அந்தந்த ஒன்றியங்களில் மாணவர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு முதல் வகுப்புகளில் இதைத்துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெற்றோர் மற்றும் மாணவர்கள் விருப்பத்தினை கேட்டு, தமிழ் வழியில் படிக்க விரும்பினால், தமிழ் வழியிலும், ஆங்கில வழியில் படிக்க விரும்பினால் ஆங்கில வழியிலும் படிக்க வைக்கலாம் என அறிவுரைகளும் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன.தாய்மொழியான தமிழ்மொழியில் கற்பது நல்லதா? ஆங்கிலத்தில் கற்பது நல்லதா? என பட்டிமன்றமே நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில வழி கல்விமுறையை கொண்டு வந்துள்ளதாக நினைக்க வேண்டாம்; கால மாற்றத்திற்கு ஏற்றாற் போன்று, இம்முடிவை எடுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆங்கில மொழி தெரிந்திருப்பது அத்தியாவசியமாகும். தாய்மொழியான தமிழ் தெரிந்திருப்பதுடன் மற்ற மொழியான ஆங்கிலமும் தெரிந்திருப்பது நல்லதுதான் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.

இக்கல்வி முறை கொண்டு வந்தாலும், அரசுப்பள்ளிகளில் முறையாக இதற்கென தனியாக ஆசிரியர்கள் நியமனம், வகுப்பறை கட்டங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் முறையாக செயல்படுகிறதா என கண்காணித்தால் மட்டுமே அரசுப்பள்ளிகளில் இம்முறை வெற்றி பெற செய்ய முடியும் என்பதே கல்வி ஆர்வலர்களின் கருத்தாகும்.

லெனின் பாரதி (தனியார் பொறியியல் கல்லூரி துணைப்பேராசிரியர்) :அரசுப்பள்ளிகளில் ஆங்கிலமும் பயிற்று மொழியாக இருக்கும் என்பது வரவேற்கதக்கது. உலகமயமாக்கப்பட்ட சமூகம், பொருளாதார சூழ்நிலையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆங்கிலம் பொதுமொழியாக மாறியுள்ளது. குறிப்பாக உலக தகவல் தொடர்புகள், வாணிபம் அனைத்தும் ஆங்கிலத்தின் மூலம் நடைபெறும் சூழ்நிலையில், இம்மொழி மூலம் பாடங்களை கற்பது அவசியமாகும்.தாய்மொழி மூலம் கல்வி கற்பது என்பது மறுப்பு எதுவும் இல்லை. அதுதான் ஆரோக்கியமான கல்வியாகும் என்பதில் சந்தேகமில்லை. அரசின் இந்த அறிவிப்பு இன்றைய சூழ்நிலையின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. தற்போது அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளிகளும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் மொழியாக பார்க்கும் பார்வை இல்லாமல் வெறும் மதிப்பெண் பெறும் பாடங்களாக மட்டும் பார்ப்பதால் சரியாக கற்க தவறுகின்றனர். இந்த நிலை மாற்றி தாய்மொழி வழியாகவும், ஆங்கிலம் வழியாகவும் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் திறனுடைய மாணவர்களை உருவாக்கினால் மட்டுமே இத்திட்டம் வெற்றி பெற முடியும். தாய்மொழி நமது அடித்தளம், ஆங்கிலம் நமது எதிர்காலம். அடித்தளத்தை பாதுகாத்துக்கொண்டே நமது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எனவே, ஆங்கில வழி கல்விமுறையை வரவேற்கலாம்.

ராஜா (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) :மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தாய் வழிக்கல்வியே சிறந்தது என அறிஞர்கள் சொல்வது மட்டுமல்ல; அனுபவம் உள்ளது. இயற்கைக்கு முரணாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் ஆங்கிலத் திணிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழை இரண்டாம் பட்சமாக ஆக்கி வருகின்றனர். ஆங்கிலத்தில் படித்தால் தான் வேலைவாய்ப்பு, மேற்படிப்புகளுக்கும், பிறநாடுகளுக்கு செல்லும் போது தொடர்புக்கு என காரணங்கள் ஆங்கில வழிக்கு காரணமாக சொல்லப்படுகின்றன. ஆனால் இவற்றில் எதுவும் உண்மையில்லை. ஆங்கில அறிவு படைத்த பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். உலகின் ஒரு சில நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் ஆங்கிலத்திற்கு வேலையே இல்லை. மொழி என்பது பேச்சு மட்டுமல்ல; நம் மனிதர்களின் பண்பாடு, கலாசாரம் சம்பந்தப்பட்ட செயல். ஒரு மொழியின் அழிவு அந்த இன மக்களின் ஆன்மாவை அழிப்பது என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எப்போது புரியப்போகிறது என தெரியவில்லை. தாய்மொழியான தமிழ் வழி கல்வியே சிறந்தது.வெற்றி வேல்செழியன், உடுமலை: தாய் மொழியில் கல்வியே சிறந்ததாகும். தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளிட்ட எந்தமொழி வேண்டுமென்றாலும் கற்கலாம். ஆனால், தாய்மொழியான தமிழ்மொழியிலேயே கற்றால் தான் சுயமாக சிந்திக்கும் திறன் மேம்படும். இங்கு படித்துச்செல்லும் மாணவர்களும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கே சென்று பணியாற்ற விரும்புகின்றனர். மற்ற மொழிகளை கற்றாலும், தாய்மொழி வழி கல்வியே சிறந்தது.

சதாசிவம், உடுமலை :அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமுறைக்கு வரவேற்கத்தக்கது. குறிப்பிட்ட பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வைக்க முன்வர வேண்டும்.

கிறிஸ்துராஜ், உடுமலை:அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமுறை வரவேற்கதக்கது. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் இம்முறையான கல்வி முறை கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. ஏöனில், மேல்நிலை படிப்பு முடித்து கல்லூரி செல்லும்போது ஆங்கில மொழி அவசியமாகிறது. ஆங்கிலமொழி தெரியாவிட்டால், கல்லூரி படிப்பு படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆங்கிலம் கற்பது தற்போது இன்றியமையாததாக மாறி உள்ளது.

வினோதா, கோமங்கலம்புதூர்:பொள்ளாச்சியில் மொத்தம் உள்ள பள்ளிகளில், 20 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி கற்றல் அறிமுகமாகியுள்ளது. இத்திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தனியார், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களுக்கும் நம்பிக்கையளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

வைஷ்ணவி, ராசாக்காபாளையம்:ஆங்கில வழிக்கற்றல் முதல் வகுப்புகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளிலும் விரைவில் துவங்க வேண்டும். முன்னிருந்த ஆர்வத்தை காட்டிலும் தற்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அதிக விருப்பம் காட்டுகின்றனர். இத்திட்டம் மக்களிடையேயும், மாணவர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர வேண்டும்.

பிரகாஷ், கிணத்துக்கடவு: ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் ஆங்கில வழியில் படிக்க முடியாத அளவிற்கு, கட்டணம் வசூலிக்கப்படுவதால், அவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இதுவரையிலும் இருந்து வந்தது. தற்போது, அரசு துவக்கப்பள்ளி முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை ஆங்கில வழி கல்வியை தமிழக அரசு துவக்கியுள்ளது வரவேற்கதக்க ஒன்று. கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை துவங்க துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலுச்சாமி (உதவிப்பேராசிரியர்) : அரசு கொண்டுவந்துள்ள ஆங்கிலவழிக்கல்வி திட்டத்தினால் ஏழை, எளிய மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர். இதனால், மேலைநாடுகளில் உயர்பதவிகளை பெறவாய்ப்புள்ளது. குழந்தை பருவம் முதலே இந்த கல்வி முறை செயல்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறும். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி மூலம் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

அஸ்வதி (கல்லூரிமாணவி):வால்பாறை மலைப்பகுதியில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். குறிப்பாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆங்கிலவழிக்கல்வி திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது.மேலும் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அவர்களின் கல்வித்தரம் உயரும்.

மனோகரன், மண்ணூர்:அரசுப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்தது மிகவும் வரவேற்கதக்கது. அதிகம் செலவழித்து தனியார் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாதவர்களுக்கு, இது நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். அரசின் இம்முயற்சி வெற்றிப்பெற, ஆங்கில வழிக்கல்விக்கென தனியாக, ஆங்கிலப்புலமை வாய்ந்த தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். தனியார் பள்ளிக்கு நிகராக, ஆங்கில வழிக்கல்வியில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக, கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பயனடைவர்.

சுப்பிரமணியன் (ராமச்சந்திராபுரம்): அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. ஏழை, எளியவர்கள் புத்தகம், சீருடை, பள்ளிக் கட்டணம் ஆகியவற்றுக்கு அதிக பணம் செலவழித்து தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் ஆங்கில வழிக் கல்விக்காக நீண்ட தூரம் பயணம் செய்து நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அரசின் இந்த அறிவிப்பால் கிராமத்திலேயே ஆங்கில வழிக் கல்வியை பெற முடியும். இதனால், தனியார் பள்ளி மாணவர்களோடு, அரசு பள்ளி மாணவர்கள் போட்டி, போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

பச்சையப்பன்(தாத்தூர்):அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தி உள்ளதால், கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் மிகுந்த பயனடைவர். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் எதிர்காலத்தில் வரும் போட்டியை சமாளிக்கவும், வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை போக்க முடியும். ஆங்கில வழிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தும் போது இக்கல்வி முறைக்கென தனியாக ஆசிரியர்களை நியமித்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

ஈஸ்வரன்; கல்விக்குழு உறுப்பினர் அனுப்பர்பாளையம் துவக்கப்பள்ளி;அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகமானது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பலரும் திறமையானவர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது டி.இ.டி., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். இந்த ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்து கல்வி கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தனியாருக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயரும். இதனால் பெற்றோரும் ஆர்வத்துடன் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.

கிருஷ்ணகுமார்; தகவல் தொழில் நுட்ப த்துறை மாணவர் : பொதுவாக நம் மாணவர்களுக்கு கம்யூனிக்கேஷன் ஸ்கில் குறைவாக உள்ளது. அதனால் திறமையிருந்தும் நம் மாணவர்களால் சாதிக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். திறமையையும், மொழியாற்றலையும் கொண்டுவருவதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இது வரவேற்கத்தக்கது. இதே போல் இந்தி மொழியையும் உட்புகுத்த வேண்டும். அப்போது தமிழகம் தன்னிகரில்லா மாநிலமாக உயரும்.

ஆனந்தி, மண்ணூர்:அரசுப்பள்ளியில் ஆங்கிலக்கல்வியின் வருகையால், இனி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அடித்தட்டு மக்கள் கூட, தங்களுடைய பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் அரசுப்பள்ளியில் சேர்ப்பர். வருமானத்தில் பெரும்பங்கை, பிள்ளைகளின் கல்விக்கே ஒதுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அரசு ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்ததால், வீட்டின் பொருளாதாரமும் சற்று மேம்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...