மாநிலம் முழுவதும், போதிய பாதுகாப்பில்லாமல், 2,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன-DINAMALAR


இந்த பள்ளிகளை மூடும் விவகாரத்தில், மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாலும், பள்ளிகளின் பின்னணியில், அரசியல் பிரமுகர்கள் இருப்பதாலும், என்ன செய்வது என, தெரியாமல், மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள், தவித்து வருகின்றனர்.எந்த நேரத்தில், என்ன நடக்கும் என, தெரியாத நிலை இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள், "கிலி' அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 7,000 நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2,000த்திற்கும் அதிகமான பள்ளிகள், போதிய பாதுகாப்பின்றி, போதிய இடவசதி இல்லாமல், குறுகலான இடங்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், பல பள்ளிகள், பழைய கட்டடங்களில் இயங்கி வருவதும், மாவட்ட அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னையில், 430 நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், பெரும்பாலானவை, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என்பதை, மாவட்ட அதிகாரிகள், வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சைதாப்பேட்டையில், ஒரு பள்ளி இடம் மாறியுள்ளது. அதைக்கூட, தங்களுக்கு தெரிவிக்கவில்லை என, அதிகாரிகள் வேதனைப்படுகின்றனர்.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளிகள், போதுமான இடவசதியும், காற்றோட்டமான வகுப்பறைகளையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சென்னையில், மூலை, முடுக்குகள் எல்லாம், நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன.இங்கு கூட, பள்ளிகள் இருக்குமா என, ஆச்சரியப்படும் அளவிற்கு, முட்டுச் சந்துகளில் கூட, பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், குழந்தைகள், எளிதில் வெளியே வர முடியாத நிலையும், பல பள்ளிகளில் உள்ளன."பள்ளி கட்டடம் பாதுகாப்பாக இல்லை' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர், அறிக்கை தருகிறார். ஆனால், "கட்டடம் வலுவாக உள்ளது' என, தாசில்தார், சான்றிதழ்தருகிறார். இது, எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. "பாதுகாப்பில்லாத, உரிய இட வசதியில்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், "நீங்கள், பள்ளியில் உள்ள குழந்தைகளை, வேறு பள்ளியில் சேர்த்துவிட்டு, தகவல் கொடுங்கள்; அதன்பின், பள்ளியை மூடுகிறோம்' என, தெரிவிக்கின்றனர். ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாற்றுவதில், பல சிக்கல்கள் இருக்கின்றன. பாதியில், வேறொரு பள்ளிக்கு மாற்றுவதை, பெற்றோர் விரும்புவதில்லை. அப்படியே, பலர் முன் வந்தாலும், "புதிய பள்ளியில், மீண்டும் ஒருமுறை கட்டணம் செலுத்த முடியாது' என, கூறுகின்றனர். ஆனால், "கட்டணம் கட்டாவிட்டால், சேர்க்க முடியாது' என, பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.இப்படி, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு, உறுதியான, சரியான முற்றுப்புள்ளி வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், நாங்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வேலை செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆய்வுக்குச் செல்லும் நர்சரி, பிரைமரி பள்ளி ஆய்வாளர்கள், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாகவும், புலம்புகின்றனர். பல பள்ளிகளை, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ நடத்துகின்றனர். அதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சித்தால், அரசியல்வாதிகள் விடுவது இல்லை எனவும் கூறுகின்றனர்.
அதிகாரிகள் தரும் அறிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகங்களும், கடும் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், அதிகாரிகளும், அரசும், தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், கும்பகோணம் சம்பவம் போல், எங்கேயாவது மீண்டும் நடந்துவிடும் அபாயம் உள்ளது. பாதுகாப்பற்ற பள்ளிகளை அடையாளம் கண்டு, எவ்வித சிபாரிசையும் ஏற்காமல், அவற்றை மூடினால் மட்டுமே, அபாயம் நீங்கும்.
- நமது நிருபர் -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...