ஆசிரியர்கள் தினம்

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர்.
அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
அவர் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் பணியின் சிறப்பு:
ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது. மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு.
ஆசிரியரின் தகுதிகள்:
இன்றைய இயந்திரதனமான, போட்டிகள் நிறைந்துவிட்ட இவ்வுலகில் ஒரு மாணவனை தலைசிறந்த மாணவனாக மாற்ற ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்களுக்கு அன்பான, அழகான முறையில் படிப்பின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கூற வேண்டும்.
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தனிப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, ஆசை இருக்கும் அதை அந்த மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும். ஒரு மாணவனை ஒழுக்கமுள்ளவனாகவும், நல்ல சிந்தனை உள்ளவனாகவும், கண்ணியமானவனாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்கள் தங்களுடைய அறிவையும், பொன்னான நேரத்தையும், மேலான உழைப்பையும் முதலீடு செய்பவர்களாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் தொடர்ந்து தங்களுடைய அறிவை பெருக்குவதில் ஆசிரியர்கள் உந்துசக்தியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முறையான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
“ஆசிரியரான உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை?” என்ற சிறை அதிகாரியின் கேள்விக்கு “ஆசிரியர் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்று பாலைவனச் சிங்கம் என்று அன்போடு அழைக்கப்படும் உமர் முக்தார் அவர்களின் பதிலில் உள்ள நம்பிக்கையையும், உறுதியையும் முன்மாதிரியாக ஒவ்வொரு ஆசிரியரும் கடைபிடித்து நாளைய சமூகத்தை முன்னேற்றும் பணியில் முதன்மையாக இருக்க வேண்டும்.
ஆசிரியரின் இன்றைய நிலை:
ஆசிரியர்கள் தங்களுடைய இந்த பணியை மிகவும் தியாக உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் மாறாக இன்றைய ஆசிரியர்களில், பெரும்பாலானவர்கள் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தொழிலாகத் தான் கருதுகின்றனர்.
பாடத்திட்டத்தில் சில ஆசிரியர்களுக்கு ஆர்வமற்ற ஆளுமையற்ற சூழல், கற்பித்தல் முறையில் தெளிவின்மை, சில ஆசிரியார்கள் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடங்களை சொல்லிக் கொடுத்து மந்தமான மாணவர்களை மட்டந்தட்டுவது, தன்னிடம் டியுஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நன்றாக சொல்லிக்கொடுப்பது, சீரற்ற பழக்கவழக்கங்களை மாணவர்கள் முன்பு செய்தல் போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளால் மாணவ சமுதாயம் ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களாக உள்ளனர்.
சமீப காலமாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைகாட்சி வாயிலாகவும் பார்க்கும் ஒரு சில ஆசிரியர்களின் பாலுணர்வை தூண்டும் நடவடிக்கைகள் மாணவ சமுதாயத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மீதுள்ள நன்மதிப்பை குழைக்கும் விதமாகவும் உள்ளது.
ரத்தின சுருக்கமாக சொன்னால் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள தூரம் அதிகமாக உள்ளது.
இந்த நிலை தொடருமேயானால் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்கத்தை பேணாதவர்களும் அதிகரித்து நாட்டின் வளர்ச்சி என்பது பாரதூரமான விஷயமாக மாறிவிடும்.
ஆசிரியர் மாணவர் உறவு:
வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் மாறாக இன்றைய வகுப்பறைகள் மாணவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் இடமாக காட்சியளிக்கிறது.
அக்கறையற்ற தண்டனைகளால் அன்பு கலந்த கண்டிப்புகள் குறைந்து ஆசிரியர்களை மாணவர்கள் ஒரு எதிரியாக பாவிக்கக்கூடிய சூழல் வளர்ந்து வருகிறது. இதனால் அந்த மாணவன் ஆசிரியரை மட்டும் வெறுக்காமல் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தையும், பள்ளியையும் வெறுக்கக்கூடிய சூழல்கள் அதிகரிக்கிறது.
மாணவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறிவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.
“ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம் அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே சுழல்கள் இல்லை நாம் தைரியமாக ஆற்றைக் கடக்கலாம் என்றார். அந்த நிலையில் அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன் இவ்வாறு பதில் கூறினான் “இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்.”
ஆசிரியர் மாணவர் உறவு என்பது தாய் மகன் உறவு போன்றது, ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவாலோ அதே போன்றதொரு அக்கறையையும் ஆசிரியர்கள் செலுத்தும் போது தான் ஆசிரியர் மாணவர் உறவு என்பது வலுப்பெறும். மேலும் மேம்பட்ட கற்பித்தல் திறனும் ஆசிரியர் மாணவர் உறவுக்கு வலு சேர்க்கும்.
எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ஆசிரியர் சமூகம் தங்கள் பணியை திறம்பட செய்து மாணவர் உலகில் மாற்றத்தை கொண்டு வந்து நாளைய இந்தியாவை வல்லரசாக ஆக்க வேண்டும்!! ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
-முஹம்மது அபூபக்கர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...