"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை': "மறைவு'க்குப்பிறகும் மண்ணுக்குள் போகாத மனிதர்!

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் மற்றும் இருதய வால்வுகள் உள்பட நான்கு பாகங்கள் தானமாக
வழங்கப்பட்டதால், ஏழு பேர் மறுவாழ்வு பெற்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஊத்துக்காடு ரோடு, முத்துக்கவுண்டர் "லே-அவுட்'டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ஜெயகுமார், 45. டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி கவிதா, 37; இல்லத்தரசி. திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. அஸ்வத் எனும், 8 மாத மகன் உள்ளான்.ஜெயகுமார், கடந்த வாரம் திடீரென மயக்கமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை மோசமானதை அடுத்து கடந்த 1ம் தேதி கோவை, பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு கண்டறியப்பட்டது. எனினும், அதிக ரத்தக்கசிவால், மூளைச்சாவு ஏற்பட்டது.இதை உறுதி செய்த டாக்டர்கள், உறவினர்களிடம் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் குறித்து, ஜெயகுமாரின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவரது உறவினர்கள் இதற்கு உடன்பட்டு, இத்தகவலை அவரது மனைவி கவிதாவிடம் தெரிவித்தனர். மறுப்பேதும் சொல்லாத கவிதா, உடல் உறுப்புகள் தானத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, டாக்டர்கள் உடல்உறுப்புகளை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை துவங்கினர்.

பி.எஸ்.ஜி., மருத்துவமனை மேலாண் இயக்குனர் விமல்குமார்கோவிந்தன் கூறியதாவது:நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு, ஜெயகுமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. உடல் உறுப்பு தானம் குறித்து அவரது உறவினர்கள், மனைவியிடம் தெரிவித்தோம். அவர்கள் சம்மதம் கிடைத்ததால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் இன்று(நேற்று) காலை கோவை வந்தனர். இவர்களுடன் எங்களது மருத்துவமனை நரம்பியல் நிபுணர் வேணு, சிறுநீரக நிபுணர்கள் ராமலிங்கம், ஆனந்தன் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் பகல் 12.00 மணிக்கு அறுவை சிகிச்சையை துவங்கினர்.மாலை 5.00 மணி வரை அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட ஜெயகுமாரின் கல்லீரல், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், இருதய வால்வுகள் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. ஒரு சிறுநீரகம் எங்கள் மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெயகுமாரின் உறவினர்கள் மற்றும் அவரது மனைவி உடல் உறுப்பு தானத்துக்கு சம்மதித்தது பாராட்டுக்குரியது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

விமானத்தில்...:

ஜெயகுமாரிடமிருந்து, பெறப்பட்ட கல்லீரல், இருதய வால்வுகள் விமானம் மூலம் சென்னை செல்ல ஏற்பாடுகள் நடந்தன. விரைந்து செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையிலிருந்து ஏழே நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்த உடல் உறுப்புகள் மாலை 6.50 மணிக்கு சென்னை செல்லும் ஜெட் கனெக்ட் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. விமானம் சென்னையை இரவு 7.50 மணிக்கு அடைந்ததும், உடல் உறுப்புகளை பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிறுநீரகங்கள் பொருத்தும் அறுவை சிகிச்சையும் பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தது.

2வது நாளாக...:

நேற்று முன்தினம் வாகன விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபர் ராஜகோபாலின் கல்லீரல் மற்றும் கண்கள் உள்பட ஐந்து பாகங்கள் எடுக்கப்பட்டு, ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டன. நேற்று மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் மற்றும் இருதய வால்வுகள் உள்பட நான்கு பாகங்கள் தானமாக வழங்கப்பட்டதால், ஏழு பேர் மறுவாழ்வு பெற்றனர். தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக, உடலுறுப்புகள் தானம் நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7 நிமிடத்தில் ஏர்போர்ட்:


ஜெயகுமாரின் உடல் உறுப்புகளை, டாக்டர் குழுவினர், கோவை விமான நிலையத்துக்கு ஆம்புலன்சில் எடுத்துச் சென்றபோது, மாநகர போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பீளமேடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை 5.30 மணிக்கு பி.எஸ்.ஜி., மருத்துவமனையிலிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், 7 நிமிடங்களில் விமானம் நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து, "ஜெட் கனெக்ட்' விமானத்தில், உடல் உறுப்புகள் சென்னை கொண்டு செல்லப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...