இந்தோனேஷியாவில் பயங்கர நில நடுக்கம்;பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 100 பேர் பலியாயினர். 225-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பசிபிக் கடலின் ‘நெருப்பு வளையம்‘ என்று இந்தோனேஷியா அழைக்கப்படுகிறது. குமுறும் எரிமலைகள், பூமிக்கடியில் நகரும் பாறை அடுக்குகள் அதிகம்
இப்பகுதியில் இருப்பதன் காரணமாக இந்தோனேஷிய நாட்டில் அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி(இந்திய நேரப்படி 5 மணி 3 நிமிடம்) அளவில் சுமத்ரா தீவின் ஏஸ் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் கடலுக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவில் 6.5 ஆக பதிவானது. பூமி அதிர்ச்சி கடலுக்கு அடியில் ஏற்பட்டாலும் கூட சுனாமி உருவாகவில்லை.

நில நடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் கண் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தங்களது வீடுகளில் பண்ட பாத்திரங்கள் விழுந்து உருண்டோடிய சத்தம், ஜன்னல்கள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் எழுந்தனர்.

முதியவர்கள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறியடித்தவாறு ஓடினர். கடலுக்கு அடிக்கு மிகக் குறைந்த ஆழத்தில் பூமி குலுங்கியதால் இப்பகுதியில் கடற்கரையையட்டி அமைந்த பிடி ஜெயா மற்றும் பிர்யூன் ஆகிய 2 மாவட்டங்களிலும் பல கிராமங்களில் 100-க்கும் மேலான கடைகள், வீடுகள், மசூதிகள் இடிந்து தரைமட்டமாயின. இதன் இடிபாடுகளுக்குள் 300-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து மீட்பு பணிகள் தொடங்கியது. ராணுவ வீரர்கள் ஆயிரம் பேரும், 900 போலீசாரும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இடிபாடுகளை அகற்றுவதற்கு தேவையான அதிநவீன எந்திரங்கள் இல்லாததால் மீட்பு பணி மந்த கதியில் நடந்து வருகிறது.இதன் காரணமாக ஜனாதிபதி விடோடோ, அரசின் அனைத்து முகமைகளும் மீட்பு பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

பிடி ஜெயா மாவட்டத்தின் கடற்கரையோர நகரான மெயூரியூடுதான் இந்த நில நடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இங்கு மட்டும் 60-க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பிடிஜெயா, பிர்யூன் ஆகிய 2 மாவட்டங்களிலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் இழந்த 100 பேரின் உடல்களை ராணுவத்தினர் மீட்டனர். இது தவிர உயிருக்கு போராடிய நிலையில் 225-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் இழந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுனாமி பீதியில் பாதுகாப்பு கருதி நேற்று மாலை வரை தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பவில்லை. உள்ளூர் அதிகாரிகள் சுனாமி வராது என்று உறுதி அளித்த பின்பே அவர்கள் வீடுகளுக்கு சென்றனர்.வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, குடிநீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மின்சாரமும் துடிக்கப்பட்டதால் பெரும் பாதிப்புக்கும் உள்ளாயினர்.

இந்த நில நடுக்கம் குறித்து, “மெயூரியூடைச் சேர்ந்த முஸ்மான் அசிஸ் என்பவர் கூறுகையில், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தை விட மிகவும் பலத்த அதிர்வு இப்போது இருந்தது. இதனால் சுனாமி வருமோ என்று பயந்துவிட்டோம்“ என்றார்.

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இந்தோனேஷியாவில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். இதில் ஏஸ் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியானது நினைவு கூரத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...