சசிக்கு எதிராக நாடார் சங்கங்கள் கொந்தளிப்பு : காமராஜரை இருட்டடிப்பு செய்ததற்கு எதிர்ப்பு !!

அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கு எதிராக, நாடார் அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. 'காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ததற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக, போராட்டங்களில் ஈடுபடுவோம்' என, அறிவித்து உள்ளன. எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை ஒட்டி,

சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சசிகலா, 6ம் தேதி கடிதம் எழுதினார். அதில், 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர், எம்.ஜி.ஆர்.,' என, தெரிவித்து உள்ளார்.
நெருக்கடி : இது, நாடார் சமூகத்தினரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்த கட்டமாக, நாடார் சமூகத்தை சேர்ந்த, அமைச்சர் பாண்டியராஜனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு பாடநுால் நிறுவன தலைவராக, வளர்மதியை நியமித்து உள்ளார்.பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இதில், கமிஷன் பெறுவதற்காகவே, வளர்மதியை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.இதுவரை, பாடநுால் நிறுவன தலைவர் பொறுப்பையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே கவனித்து வந்தார். தற்போது, வளர்மதி நியமிக்கப்பட்டது, நாடார் சமூகத்தினரிடம், கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது காமராஜர். அதை மறைத்து, எம்.ஜி.ஆர்., என குறிப்பிட்டதற்கு, சசிகலா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டங்களில் ஈடுபடப் போவதாக, நாடார் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துரமேஷ் கூறியதாவது: காமராஜர், 1957 நவ., 1ல் முதல்வராக இருந்த போது, ஏழை மக்கள் படித்து உயர வேண்டும் என்பதற்காக, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். 1982ல் நடந்த, திருச்செந்துார் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நிறுவன தலைவர், எம்.ஜி.ஆர்., பொதுக்கூட்டத்தில் பேசும் போது, 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரை பின்பற்றியே, நான் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர், காமராஜர் என்பது, சிறு குழந்தைகளுக்கும் தெரியும். இந்த உண்மை வரலாறு தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ, சசிகலா, காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில், பிரத மருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தொடர் போராட்டங்கள் : அவர், தன் தவறை திருத்தி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும், நாடார் சங்கங்கள் மற்றும் காமராஜரின் பக்தர்கள் சார்பாக, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு முத்துரமேஷ் தெரிவித்தார்.
நாடார் மக்கள் பேரவை அமைப்பாளர், ஏ.பி.ராஜா கூறியதாவது: காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்து, ஒட்டுமொத்த தமிழக மக்களையும், சசிகலா கொதிப்படையச் செய்துள்ளார். அவர், தவறு செய்து விட்டதாக, மாற்று அறிக்கை வெளியிடும் வரை, நாடார் மக்கள் பேரவை சார்பில், வரும், 25 முதல், சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே, தொடர் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தோற்கடிக்க வியூகம்! : சசிகலா, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, நாடார் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ததற்கு, சசிகலா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம். ஆர்.கே.நகர் தொகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த, நாடார் சமுதாய ஓட்டுக்கள் கணிசமாக உள்ளன. எனவே, சசிகலாவை தோற்கடிக்க, நாடார் சங்க கூட்டமைப்பு, தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...